உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழி....மொழி நூல் மற்றும் நூலாசிரியர் ஒரு சிறிய அறிமுகம்

உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

இன்று பொதுத் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் திரு. நிர்மல் அவர்களுக்குப் பெரிய மனக்குறையிருக்கிறது. அது இன்றைய தமிழ்மொழியின் நிலை குறித்து, அதாவது தமிழ் மொழி சிதைவு மற்றும் மொழி அழிவைப் பற்றியதாகும். சுற்றுச்சூழல் மாசுவிற்கு எக்ஸ்னோரா (Exnora) என்ற மருந்து ஒன்றைக் கண்டுபிடித்த நிர்மல், மொழி மாசுவிற்கும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அந்த மருந்தின் பெயர் மொழி, "மொழி". எல்லா வளமும் அனைத்துச் சொற்களும் உள்ள தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் ஏராளமானோர். குறிப்பாக பட்டணங்களில் வாழும் தமிழர் மற்றொரு தமிழரிடம் தமிழில் பேசாமல் எப்போதும் ஆங்கில மொழியில் பேசுவது இவருக்கு அதிர்ச்சியைத் தருகிறது. தமிழர் முன்னேற வேண்டும், தமிழர் வாழ வேண்டும், அதற்குப் பிற மொழிகளின் அறிவு, குறிப்பாக ஆங்கில மொழிப் புலமை, தமிழனுக்கு அவன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பெரிதும் உதவும் என்பதில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இவருக்கு இல்லை. ஆனால், தமிழும் வாழ வேண்டும், தமிழரும் வாழ வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனை எப்போதும் இவருக்கு உண்டு.

"தமிழ்மொழி உறுதியாக என்றும் நிலைத்து நீடித்திருக்கும்" என்றாலும், தமிழர்கள் தமிழர்களிடையே பேசும் போதுகூட, ஆங்கில மொழியில் உரையாற்றும் ஆர்வம் அவர்கள் கூடும் போதும் அவர்களைக் காணும் போதும் "எங்கே வரலாற்றுப் பெருமை வாய்ந்த தமிழ் மொழி தேய்ந்து போய்விடுமோ!" என்ற அச்சம், இவருக்கு இயற்கையாக ஏற்படுகிறது. இந்த வழக்கம் குறிப்பாக, பட்டணங்களில் வாழும் தமிழர்களிடையே பெரிதும் காணப்படுகிறது. 

பட்டணத்தமிழர்கள் ஏராளமானோர் தமிழில் பேசுவதை "அநாகரிகம்" என்றும், ஆங்கிலத்தில் பேசுவதை "நாகரிகம்" என்றும் கருதி, அவ்வாறே பேசி வருகிறார்கள். பட்டணத்தார்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்று எதுவென்றால், பட்டினத்தார் பிறந்த பூமி இது. அவர் பட்டணத்தில் வாழ்ந்து, பாடி அதுவும் தமிழில் பாடி பெருமை பெற்றதும் பட்டணத்திலேதான்.

அதேபோன்றுதான், அயல்நாட்டில் வாழும் தமிழர்கள். பலர் தமிழை வேகமாக இழந்து வருகிறார்கள். "தமிழ்" வேகமாக இவர்களை இழந்து வருகிறது. இது போன்ற காரணங்களால்தான், உலகத்தில் பல பெரிய மொழிகள், நாளாவட்டத்தில் வழக்கொழிந்த மொழிகளாக மாறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இரண்டாவது இவருக்குக் கவலையளிப்பது - "மொழி அரிப்பு" மற்றும் "மொழி அழிப்பு". ஆம்! தேவையில்லாமல் தமிழ் மொழியை வதைப்பது, சிதைப்பது, சேதப்படுத்துவது, மாசுபடுத்துவது. இப்படிச் செய்வதில் பலருக்கு ஏனோ ஒரு குரூர மகிழ்ச்சி கிடைக்கிறது. இவர்களது நடவடிக்கைகள், நிர்மலுக்கு மனவேதனையை உண்டாக்குகிறது. சொற்கள் இல்லாவிட்டால் சரி. சொற்களுக்கு மொழியில் பஞ்சம் இருந்தால் கூட இந்த அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். கடல் போன்று பெரியது அல்லவா தமிழ் மொழி. இனிய மொழியான தமிழைப் பண்பற்ற பேச்சுகளால், கெட்ட சொற்களைப் பயன்படுத்துவதால் கசப்பான மொழியாக மாற்றி வருவது சரிதானா?

தமிழ்நாடு தமிழர்களின் மாநிலம். நிர்மல் அவர்களைப் பொருத்தவரை தமிழ்மொழி பேசும் தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும், மற்ற மொழிக்காரர்கள் அனைவரும் தமிழர்களே. ஏனென்றால் தமிழ் புராதன மொழி.  இந்நாட்டில் முதலில் தோன்றிய மொழி. மற்ற தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து உதித்தவை. சமஸ்கிருதத்தோடு வெவ்வேறு விகிதத்தில் கலந்து மாறுபட்டவைதான், மற்றத் திராவிட மொழிகள். அம்மொழிகளில் ஏராளமான தூய தமிழ்ச் சொற்கள் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆட்சி மொழி தமிழ். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையிலேயே தமிழ் படும் பாடு இவருக்குக் கண்ணீரையே வரவழைக்கிறது. நல்ல சொற்கள் உடைய தமிழ்மொழி கொச்சை மொழியாவதை (slang) எத்தனை காலம்தான் பார்த்துக் கொண்டிருப்பது, பொறுத்துக் கொண்டிருப்பது.

கடைசியாக, இன்றைய உலக மருத்துவ விஞ்ஞான தொழில் வளர்ச்சிக்கு ஒப்ப, "தமிழ் வளர்ச்சி பெறாமலிருப்பது, நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று" என்பது இவருடைய எண்ணம். மொழி வளர்ச்சி, உலகில் வாழும் தமிழ் அறிஞர்களின் பணி.  அவர்களுக்குத் தோள் கொடுப்பது மற்றவர்கள் பணி. 

இந்தக் கருத்துகளுக்கு ஆதரவாக, உலகில் வாழும் பத்துக் கோடி தமிழர்களும் உதவிக்கரம் நீட்டினால் மொழி புத்துயிர் பெறும், தமிழ் தழைக்கும். தமிழைத் தலை நிமிர வைக்கும்.  ஐம்பது லட்சம் மக்களால் மட்டுமே பேசப்படும் பல ஐரோப்பிய மொழிகள், உலக அளவில் பிரபலமடைந்துள்ளன. பல நாடுகளில் பேசப்படுகின்றன. உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி “மான்டரின்” என்ற சீன மொழி. இரண்டாவது ஆங்கிலம். உலகின் பதினான்காவது பெரிய மொழி தமிழ். இந்திய மொழிகளில் உண்மையிலே உலக மொழி எதுவென்றால் தமிழ்தான். தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகள் மட்டுமின்றி பல நாடுகளில் தமிழ் முக்கிய தகுதியைப் பெற்றுள்ளது. அப்படியிருந்தும், தமிழ் மொழி தமிழர்களாலேயே ஏன் மறக்கப்படுகிறது, மறைக்கப்படுகிறது, ஒதுக்கப்படுகிறது, ஒடுக்கப்படுகிறது, ஓரங்கட்டப்படுகிறது, நசுக்கப்படுகிறது? என்பது இவருடைய நியாயமான ஆதங்கம்.

இந்தக் குறைகளுக்கெல்லாம் விடையாக மற்றும் மருந்தாக மொழி, "மொழி" என்ற இயக்கத்தை நிர்மல் அவர்கள் தொடங்கியுள்ளார். மேலே கூறப்பட்ட இலக்குகளை அடைய அதாவது மொழி சேவையைச் செய்ய நிர்மல் தன்னுடைய திட்டங்களைக் கூறுகிறார். இவை யாவும் நிர்மல் அவர்கள் சிந்தனையிலிருந்து வந்த பொறிகள். இப்பொறியில் கிடைத்த விடையே மொழி! "மொழி!!" இயக்கம். இந்நூல் படிப்பவரைச் சிந்திக்க வைக்கும், பரவசப்படுத்தும். கண்களை நனைக்கும், அழிக்க முடியாத பாதிப்பை ஆழ்மனதில் உண்டாக்கும்.  படியுங்கள்!, பயன் பெறுங்கள்!!, பரப்புங்கள்!!! இதில் கூறப்பட்டிருக்கும் நற்செய்திகளை.

இது ஒரு தமிழ் மொழி மறுமலர்ச்சி இயக்கம், ஏன் தமிழ்ப்புரட்சி இயக்கம். இப்பொறிகள் காட்டுத் தீயாகப் பரவ வேண்டும். இதன் இலக்கு என்ன? கொள்கை என்ன? செயல் திட்டங்கள் என்ன? மொழி சேவைகள் என்னென்ன? இதோ நிர்மல் வருகிறார், அவரே கூறுகிறார்.

அனகை நா.சிவலிங்கம்
எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் உயர்மட்ட பிரதிநிதி (செனட்டர்)
நிர்மல் நண்பர்
"நிர்மல் ஒரு நீருற்று" அவசியம் பார்க்க கடைசியில்

ஒரு எளிதான உடனடியாக நீங்கள் செய்யக்கூடிய மொழிச் சேவை எதுவென்றால் கணினியில் மின்னஞ்சல் மூலம் உங்கள் அனைத்துத் தமிழ் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிவோர், உங்கள் பகுதிவாழ் மக்களுக்கு இச்செய்தியையும் இந்நூலையும் அனுப்புவதே ஆகும்.

 

 
Powered by FFMedias