உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழி "மொழி" கிளையின் பணிகள்

கொள்கைகளை மற்றும் செயல் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர வழிமுறை

மொழி, "மொழி" பிரதான கிளைகளைப் பட்டினங்களிலும், கிராமங்களிலும் உருவாக்குதல், கிளைகள் மூலம் இலக்கை நடைமுறைக்குக் கொண்டு வருதல். செயல் திட்டங்களைக் கிளைகள் மூலம் மக்களிடையே எடுத்துச் சென்று, அவர்களைப் பெற்றுக் கொள்ளச் செல்வது.

மொழி, "மொழி" இயக்கத்தின் இலட்சியத்தின் இலக்கை அடைய அதன் முக்கிய நான்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். மொழிச் சேவைகளைச் எடுத்துச் சொல்வது முக்கியமாகும். அதன் பொருட்டு மொழி "மொழி" அமைப்பின் கிளைகள் மாதம் ஒருமுறை கூடுவது அவசியம்.

இவ்வியக்கத்தின் இலக்கு மற்றும் கொள்கைகள் ஆகியவற்றைப் பட்டித்தொட்டி எடுத்துச் செல்வது மிக்க அவசியம் ஆகும்.

மாதக்கூட்டங்களில் அறிஞர் பெருமக்கள், தமிழ் ஆர்வலர்கள், சொற்பொழிவாளர்கள், தமிழையே சுவாசிப்பவர்கள் ஆகியோர்களை வரவழைத்து, மாதந்தோறும் சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அவசியமாகும். இவ்வறிஞர்களைப் பாராட்டிப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இச்செயல் உறுப்பினர்களின் தமிழ்மொழி அறிவை மேம்படுத்தும். இவர்கள் சிந்தனைச் சிதறல்களை உறுப்பினர்கள் குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவையாவும் மொழி, "மொழி" இயக்கத்தின் மிக முக்கிய நடவடிக்கையாகும்.

 • பொறுப்பாளர்கள்
 • தலைவர்
 • செயலாளர்
 • பொருளாளர்

மொழிச் சேவை இயக்குனர்கள்

 • இயக்குனர் - வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்
 • இயக்குனர் - பழகு தமிழ், அழகுத் தமிழ்
 • இயக்குனர் - பண்புத் தமிழ், நன்று தமிழ்
 • இயக்குனர் - மொழி வளம் சேர்த்தல், மொழி நலம் காத்தல்்

இயக்குனர் மொழி, "மொழி" இயக்கத்தின் வளர்ச்சி - கல்லூரிகள், பள்ளிகள் துணைக்கிளைகள்

இயக்குனர் மொழி, "மொழி" இயக்கத்தின் வளர்ச்சி - அலுவலங்கள், தொழிற்சாலைகள் துணைக்கிளைகள்

இயக்குனர் மொழி, "மொழி" - பெட்டிப் பேச்சாளர்கள் மன்றம்

இயக்குனர் - தமிழ் ஆராய்ச்சி

இந்தச் செயல்திட்டங்கள் முன்பே விளக்கப்பட்டுள்ளன.

மொழி, "மொழி" இயக்கத்தின் இலக்குகளை அடைவது எப்படி, அதன் இலட்சியங்களை ஈடேறச் செய்வது எப்படி? இதோ சில வழிமுறைகள்.

செயல்திட்டங்கள்:

 1. ஒரு தமிழர் இன்னொரு தமிழரைச் சந்திக்கும் போது, "வணக்கம், வாழ்க தமிழ்" என்று கூற வேண்டும்.
 2. சந்தர்ப்பம் கிடைத்தால் மொழி, "மொழி" இயக்கத்தின் நான்கு மொழிச் சேவைகளை எடுத்துக் கூற வேண்டும்.
 3. வீடுகளில் ஒரு தமிழ் நூலகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த நூல்களைப் படிக்க வேண்டும். மற்றவர்களுக்குப் படிக்கத் தந்து உதவ வேண்டும். இது தமிழ்மொழியில் வல்லமை பெற உதவும். தமிழ் எழுத்தாளர்கள் உயரவும் உதவும்.
 4. எது எதற்கோ உண்டியல் வைத்துக் கொள்கிறோம். "தமிழ் உண்டியல்" ஒன்றை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மோசமான தமிழ் வார்த்தைகளைப் பேசினாலோ, கொச்சைத் தமிழைப் பயன்படுத்தினாலோ ஒரு ரூபாய் அபராதத்தை உண்டியலில் போட்டுவிட வேண்டும். இதில் சேரும் பணத்தைத் தமிழ்மொழி வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டும். அல்லது தமிழில் தாங்கள் வளர்ச்சி பெறப் பயன்படுத்த வேண்டும்.

மொழி, "மொழி" இது தமிழ் உள்ளங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. இதே இலட்சியங்களை மற்ற மொழியினரும் கடைப்பிடிக்கலாம். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழி பேசுபவர்களும் தங்கள் தாய்மொழியைப் போற்றிக் காப்பது அவசியம். மொழி, "மொழி" இயக்கத்தின் செயல்திட்டங்களை மொழிச் சேவைகளையும் அவர்களும் தங்கள் தாய்மொழியைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

துணை அமைப்பு - மொழி "மொழி" - பெட்டி பேச்சாளர் மன்றம் (தமிழ் மற்றும் பேச்சுத் திறமை வளர்ச்சி கருவி)

மொழி, மொழி அமைப்பின் சார்பாக, மொழி, "மொழி" - பெட்டி பேச்சாளர் மன்றங்கள் துவக்கி தமிழ் பேசும் நண்பர்கள், தங்களுக்குத் தாங்களே தங்கள் சொற்பொழிவைத் தமிழ்ச் சொல்லாற்றலை பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக இந்தத் துணை அமைப்பில் சேரும் அன்பர்கள் வாரம் ஒருமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் கூடி, உதாரணமாக ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை கூடி சிறு சொற்பொழிவாற்றலாம். ஒரு சிறிய மரப்பெட்டி (அளவு இரண்டுக்கு இரண்டு - - 2' X 2' X 2' - - கடைகளில் பொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சரக்குப் பெட்டி, ஜாதிகாய் பெட்டி என்றும் அழைப்பார்கள்.) கடைகளில் பயன்படுத்திய பெட்டியே நூறு ரூபாய்க்குள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது ஒரு உறுதியான பெட்டியை செய்து கொள்ளலாம். பெட்டி மீது நின்று ஒவ்வொருவரும் தலா ஐந்து மணித்துளிகளுக்கு மேற்படாமல், நல்ல தமிழில், பழகு தமிழில், இனிய தமிழில் ஏதாவது ஒரு தலைப்பில் யாருடைய மனமும் புண்படாத வகையில் நற்பண்புகளைப் போற்றி சொற்பொழிவு ஆற்ற வேண்டும். அந்தச் சிறிய பெட்டிதான் இவர்களுக்கு மேடை. குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி போன்றது. கூடும் இடம் பூங்கா, பள்ளி, கல்லூரி, அலுவலகம், அடுக்குமாடிக் குடியிருப்பு போன்ற ஒரு பொதுவான இடமாக இருக்கலாம். மிகப்பொருத்தமான இடம் பூங்காக்களே. இங்கு காற்று வாங்க மக்கள் வருகிறார்கள். நடைப்பயிற்சி செய்ய வருகிறார்கள். இவர்களைக் கொண்டே மொழி......"மொழி" பெட்டிப் பேச்சாளர் மன்றம் பூங்காக்கள் தோறும் துவங்கலாம். அங்கு வருபவர்களுக்கு பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும். செவிக்கும் விருந்து கிடைக்கும்.

அதுமட்டுமல்ல வாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது இவர் மட்டும் அல்லாமல் இவரைப் போன்றே மற்ற உறுப்பினர்களும் ஐந்து நாட்கள் தங்கள் ஐந்து நிமிட உரையைத் தயாரித்து பேசுவார்கள். இவர்கள் பேசுவதை வாராவாரம் காது கொடுத்து கேட்கும் போது, கேட்பவர் ஒரு மாமேதை ஆகிவிடுவார். நடமாடும் பல்கலைக்கழகமாகிவிடுவார். அவருடைய மொழி ஆளுமை முழுமை அடையும். சொல்வளம் கூடும். சிந்திக்கும் திறன் பன்மடங்கு கூடும். புதுமையாக சிந்திக்க வல்ல வலது மூளை வேகமாக வேலை செய்யும். தன்னம்பிக்கை தலைத்தூக்கும். தயக்கம் தொலைந்துவிடும். கூச்சம் காணாமல் போகும். இந்த சிறிய பெட்டியின் மீது ஏறி உரையாற்றுபவர் ஒன்றைத் தெரிந்துக் கொள்வார், இந்தச் சிறிய பெட்டிதான் பின்னால் அவர் ஏறப்போகும் பெரிய மேடையின் படிக்கட்டு என்பதை.

இம்மன்றத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர் இருப்பார். "மொழி நெறியாளர்" என்று ஒரு பொறுப்பாளர் இருப்பார். சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவில் கேட்ட சிறப்பினைப் பாராட்டி பிறகு அவர்களின் மொழித் தவறுகளை அன்புடன் இங்கிதமாக எடுத்துக் கூறுவார். முடிவில் அனைத்து உறுப்பினர்கள் ஆற்றிய உரையின் மையக் கருத்துக்களை இரத்தினச் சுருக்கமாக ஏழு மணித்துளிகளுக்கு மேல்படாமல் தலைவர் கூறுவார். செயலாளர் நன்றி கூறுவார். யாராவது ஒரு உறுப்பினர், வரவேற்பு வழங்குவார். தலைவர் கையில் ஒரு சிறிய மணி வைத்திருப்பார். பேச்சாளர் பேசி நான்கு மணித்துளிகள் ஆனவுடன், இரண்டு முறை மணி அடிப்பார். ஐந்து மணித்துளிகள் ஆனவுடன், மூன்று முறை அடிப்பார். பேசுபவர் தன் பேச்சை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். வாரா வாரம் 'மொழி நெறியாளர்' பொறுப்பை அனைவருக்கும் கிடைக்குமாறு சுழற்சி முறையில் தரலாம்.

 

 

 
Powered by FFMedias