உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

(சாவி பத்திரிக்கையில் வெளியான பழைய கட்டுரை நிறைவு)

ஒருமுறை ஒரு பெரிய மருத்துவரைச் சந்தித்தேன். அவர் வேடிக்கையாகச் சொன்னார், இன்று மனித உடல் உறுப்புகள் எல்லாம், ஒரு மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் போலாகிவிட்டன. இன்று ஒரு மனிதனுடைய உடலில் ஏதாவது ஒரு உறுப்பு பழுதடைந்துவிட்டால், நாம் செல்லும் காரில் பாட்டரியை மாற்றுவது போல் மற்றொருவரின் உறுப்பை எடுத்துப் பொருத்திவிடலாம் என்று. இறந்து போனவர்களின் உறுப்புகளை அவர் இறந்தவுடன் எடுத்து இன்னொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவிடலாம்.

இன்று கண்களாகட்டும், சிறுநீராககட்டும், கல்லீரல் ஏன் இதயத்தையே மற்றவருக்குப் பொருத்திவிடுகிறார்கள். ஜாதி, மத, மொழி பேதங்களைக் கடந்து இவைகள் நன்கொடையாக அளிக்கப்படுகின்றன, பெறப்படுகின்றன. உடல் ரீதியாக ஓர் உடல் இன்னொரு உடல் உறுப்பை ஏற்றுக் கொள்ளுமா? என்பதைத்தான் மருத்துவர்கள் பார்ப்பார்களேத் தவிர அவர்கள் ஒரே ஜாதியா? ஒரே மதமா? என்று பார்க்கமாட்டார்கள்.

என்னுடைய துணைவியார் சென்னை மருத்துவக் கல்லூரியில் இயக்குனராக பணிபுரிந்தார். ஒரு நாள் அவருடைய கல்லூரிக்குச் சென்ற பொழுது, அங்கு அலமாரியில் ஏராளமான மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இந்த மண்டை ஓட்டை வைத்துப் பார்த்து, அவர்கள் என்ன ஜாதியைச் சார்ந்து இருப்பார்கள், எந்த மதத்திற்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள், எந்த மொழிக்காரர்களாக இருந்திருப்பார்கள் என்று கேட்டவுடன், அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், "அதை யாராலும் கூற முடியாது. அதுமட்டுமல்ல இந்த மண்டை ஓடு பாதுகாத்துக் கொண்டிருந்த மூளைகள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்தன என்றும் கூற முடியாது" என்றார். இதுதான் உண்மை. இது இப்படி இருக்க மனிதர்களிடையே மட்டும் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்?

தமிழர் என்றொரு ஒரு இனம் உண்டு. தனியே அவருக்கு ஒரு குணமுண்டு.

இந்தியாவிலிருந்து இராஜஸ்தானியர்களுக்கு முன்னால், சிந்தியர்களுக்கு முன்னால், குஜராத்திக்கு முன்னால், பஞ்சாபிகளுக்கு முன்னால் அயல்நாடுசென்றவர்கள் தமிழர்கள்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற பொன் வாசகத்தை உருவாக்கி, அயல்நாடுகளுக்கும் சென்று பொன்னும், பொருளும், மணியும் ஈட்டி வந்தவர்கள் தமிழர்கள். தமிழர்கள் கடும் உழைப்பாளிகள். இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரனாகட்டும், வெள்ளைக்காரனைப் போன்று பல்வேறு ஐரோப்பிய நாட்டிலிருந்து இங்கு வந்து ஆண்டவர்களாகட்டும், இந்தியாவில் தமிழர்களை உழைப்பாளிகளாகவே பார்த்தார்கள். இலங்கைத் தேயிலை தோட்டத்திலே இடைவிடாது உழைக்க தமிழர்களையே அழைத்துச் சென்றார்கள். மலேசியா இரப்பர் தோட்டங்களில் மறுக்காமல் வேலை செய்ய வல்லமை படைத்தவர்களாகக் கருதப்பட்டுத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். தென்னாப்பிரிக்கக் கரும்புத் தோட்டத்தில் தொடர்ந்து வேலை செய்ய கடும் உழைப்பாளிகள் தேவைப்பட்ட போது, கண்ணில்பட்டவர்கள் தமிழர்கள்தான். உழைக்கத் தமிழர்கள் சென்ற நாடுகள்தான் எத்தனை?. பிஜி தீவு, மொரிஷியஸ், வியட்நாம், லாவோஸ், கம்போடியா போன்று தமிழர்கள் உலகெங்கும் விரிந்தார்கள்; படர்ந்தார்கள்.

அவ்வளவு ஏன் கர்நாடாக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்திலே பத்தாயிரம் அடி ஆழம் வரை சென்று உயிரைப் பணயம் வைத்து, பல நூற்றுக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து, தங்கத்தைத் தோண்டி எடுத்து வந்தவர்கள்தான் தங்கத் தமிழர்கள்.

ஆனால், நமது சுதந்திரத்திற்குப் பிறகுதான் தமிழர்களுக்குச் சோதனை. பர்மாவிற்கு உழைக்கச் சென்றவர்கள் தங்கள் வீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து அகதிகளாகத் தாயகம் திருப்பினார்கள். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், வட சென்னையில் குப்பை கொட்டப்படும் இடத்தில், கழிவு நீர் தேங்கும் இடங்களில் இடம் ஒதுக்கித் தரப்பட்டது அந்தப் பர்மாவிலிருந்து வந்த தமிழர்களுக்கு.

அதே நேரத்தில் இலங்கையில் இருந்து, வரிசையாகத் தோணியில் வந்து இறங்கிய தமிழர்களோ தென் சென்னை கடற்கரை புயல் புகலிடக் கட்டிடங்களில் ஆடு, மாடுகள் போல் அடைக்கப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் "தமிழ்நாடு சொந்த நாடுதானே. நம்முடைய மண்தானே" என்று நினைத்து வந்தவர்களுக்கு ஏற்பட்டது அதிர்ச்சியே! வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் தன் உடன்பிறப்புகளான பர்மாத் தமிழரையும், இலங்கைத் தமிழரையும் வாழ்வதற்கு வழிகாட்டும் பணியைக்கூட செய்யவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி.

அகதிகளாக வந்தவர்கள் இங்கேயே உட்கார்ந்து கொள்வார்கள்.

இலங்கை தமிழர்கள் அகதிகளாக மகாபலிபுரத்திற்கும், சென்னைக்கும் இடைப்பட்ட இடத்தில் அரசால் கட்டப்பட்ட வட்ட வடிவில் அமைந்திருந்த "புயல் புகலிடம்" என்ற கட்டடங்களிலே தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு குடும்பத்திற்கு பத்து அடிக்கு ஐந்து அடி இடமே. ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இடையே பல ஒட்டுத்துணிகளை போட்டு தைத்திருக்கும் துணியே தடுப்பு சுவர். ஒருவர் தூக்கத்தில் சற்றே புரண்டால் போதும், அடுத்த வீட்டிற்குப் போய்விடுவார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் எங்களை அணுகி உதவி கேட்பார்கள்.

இன்று வணிகம் பெருமளவில் நடக்கும் பிராட்வே மற்றும் ஜார்ஜ்டவுன் பகுதிகளுக்குச் சென்றால் அங்கிருக்கும் பெரும்பான்மையான கடைகளும், வியாபாரநிறுவனங்களும் நம் நாட்டின் வடபகுதியைச் சார்ந்த இந்தியர்களுக்குச் சொந்தமானதாகவே இருக்கும். ஆனால் அந்தச் சாலையில் தமிழர்களைப் பார்க்கலாம். ஒன்று அந்தக் கடைகளில் குமாஸ்தாவாக இருப்பார்கள், கடைநிலை ஊழியர்களாக இருப்பார்கள் அல்லது மிருகங்களுக்குப் பதிலாக கட்டை வண்டியில் இரும்புக் கம்பிகள் வைத்து இழுத்துக் கொண்டு இருப்பார்கள். அல்லது சரக்குகளைப் பெட்டியில் வைத்துப் பெட்டியை மூட ஆணி அடித்துக் கொண்டு இருப்பார்கள்.

அப்படி இங்கு வியாபாரம் செய்யும் வட இந்திய மாநிலத்தைச் சார்ந்த முதலாளிகளையோ அல்லது அவர்கள் இனத்தையோ குறை கூறுவது என்பது தவறு. உண்மையாகவே அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்தான். மொழித் தெரியாத ஊரில், ஒரு சிறிய முதலீட்டுடன் வந்து தங்களின் கடும் உழைப்பாலும், சாமர்த்தியத்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து அவர்கள் முன்னுக்கு வந்து இருக்கிறார்கள்.

 

 

 
Powered by FFMedias