உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

உண்மைத் தமிழ் பேசிய சகோதரி

சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில், சுற்றுசூழல் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 1991-ம் ஆண்டு சென்றோம். அப்பொழுது நடந்த குறைகள் கேட்கும் கூட்டத்தில், கணீரென்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. "அண்ணன் அவர்களே! எங்களுக்குக் கழிப்பிடம் தாருங்கள்" என்று அந்தப் பெண்மணி கேட்டாள். அவர் தமிழை உச்சரித்த விதம், உச்சரித்த வார்த்தைகள், என் கவனத்தை அவரின்பால் ஈர்த்தது. ஏனென்றால் சென்னையில் பொதுவாக "கக்கூஸ்" என்ற வார்த்தைதான் பயன்படுத்துவார்கள். "கழிப்பிடம்" என்ற நல்ல தமிழ்சொல்லைப் பயன்படுத்திய அவரைப் பார்த்து நான், "நீங்கள் யாரம்மா?, இப்படி நல்ல உண்மைத் தமிழ் பேசுகீறீர்களே?" என்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. "நான் மதுரையில் பிறந்தவள், திருச்சியில் வளர்ந்தவள், குடும்ப வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டு சென்னையில் காற்றடித்த இலையாக இங்கே ஒதுங்கியவள்" என்று அவர் கூறிய பதில் எனக்கு ஒரு கவிதையாகப்பட்டது. "எதற்கு அம்மா கழிப்பிடம் தேவை?" என்று நான் கேட்டேன், அந்தப் பெண் சொன்னார், "எங்களுக்கு இங்கு கழிப்பிடம் கிடையாது. கிட்டத்தட்ட முன்னூறு பெண்கள் திறந்த வெளியில் கால்வாய் ஓரம் காலைக்கடனை முடிக்கிறோம்" என்றார்

ஒருமுறை ஒரு குடிசைப்பகுதியிலே தீ விபத்து ஏற்பட்டு, பலர் இறந்துவிட்டார்கள். அனைவரும் உடைமைகளை இழந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு எக்ஸ்னோரா துணி வங்கி மூலம் பயன்படுத்தப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய உடைகளை ஒரு லாரியில் எடுத்துச் சென்று வழங்கினோம். அந்தத் தீ விபத்தில் இறந்தவர்கள் பத்துப் பேர். அதில் பெண்கள் ஒன்பது பேர் ஆண் ஒருவர். இந்தப் புள்ளி விவரம் சற்றுப் புதிராக இருந்தது. ஏன் அதிகமாக பெண்கள் இறந்தார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினோம். ஒரு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த உண்மை எங்களுக்குப் புலப்பட்டது. இரண்டு பக்கமும் வரிசையாக குடிசைகள் இடையில் ஐந்து அடி அகலமே உள்ள சிறிய பாதை. குடிசைகள் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது தப்பித்துச் செல்ல ஆண்களும் ஓடினார்கள். பெண்களும் ஓடினார்கள். அப்படியே ஓடிய ஆண்கள் பிழைத்துவிட்டார்கள் பெண்கள் பிழைக்கவில்லை. காரணம் என்ன தெரியுமா? தீயிலிருந்து தப்பிக்க ஓடிய ஆண்கள் முதலாவதாக செய்தது "தீ" தங்களைப் பிடிக்காமல் இருக்க, தங்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாக ஓடியதே. கண்ணகி பிறந்த மண்ணிலே உதித்த பெண்களால் அதுபோன்று செய்ய முடியவில்லை. நிர்வாணமாக ஓடி, தங்கள் மானத்தை இழப்பதைவிட உயிரையே இழப்பது மேல் என்று நினைத்துவிட்டார்கள் போலும். உடையுடன் ஓடிய அவர்களின் உடையில் பிடித்த தீ அவர்கள் வாழும் பகுதியிலேயே அவர்களை தீக்கிரையாக்கியது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, தமிழர்கள் பெரிதாகச் சிந்திக்க வேண்டும். ஒருவனுடைய வெற்றியின் அளவு, அவனுடைய மூளையின் அளவைப் பொறுத்ததல்ல. அவனுடைய சிந்தனையின் அளைவைப் பொறுத்ததே என்பதைத் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். கூலிக்காரர்களாக வேலை செய்பவர்கள், முதலாளியாக மாற முயற்சி செய்ய வேண்டும். உலகில் முடியாதது என்று ஒன்று கிடையாது. "அவனால் முடிகிறது என்றால் நம்மால் மட்டும் ஏன் முடியாது" என்ற கேள்வியை தனக்குத் தானே தமிழர்கள் எழுப்பிக் கொள்ள வேண்டும்.

 

 

 
Powered by FFMedias