உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழியாளர்கள் தமிழாளர்கள்

ஒரு காலத்திலே சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆரியர்கள் கைபர் கணவாய் மூலம் இந்தியாவில் நுழைந்து இவர்களைத் தெற்கே விரட்டி அடித்தார்கள். பின்னால் இங்கு வாழ்ந்த தமிழர்கள் பேசிய தமிழில் சமஸ்கிருதம் ஊடுருவியது. அதன் விளைவாக, தென் இந்தியாவின் வெவ்வேறு நிலப்பகுதிகள் இடையே வாழ்ந்தவர்கள் இடையே தமிழும், சமஸ்கிருதமும் கலந்து மூன்று முக்கிய மொழிகள் உருவாகின. அவை தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம். தமிழிலும், சமஸ்கிருதத்தின் தாக்கம் கணிசமாக இருந்து வருகின்றது. ஆக இவர்கள் அனைவருமே தமிழர்கள்தான். அதுமட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருமே தமிழர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வாழும் ஏராளமான தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வீட்டில் பேசுவது தமிழில்தான். அவர்கள் தமிழையே சுவாசிக்கின்றார்கள்.

இன்று திரைப்படத்துறையில் மராத்தியை தாய்மொழியாக, இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர், நடிகைகள் கூட வீட்டில் தமிழையே பேசுகிறார்கள். மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டு, கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்த சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி வீட்டில் பேசுவது தமிழில்தான். தமிழ் நாட்டில் பிராமணர்களை பலர் தமிழர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், சேரப் போகும் வேலையைப் பொருத்ததாகட்டும் தங்கள் தாய்மொழியை தமிழாகத்தான் தமிழ்நாட்டு பிராமணர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழ் ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் பிராமணர்கள். பத்திரிக்கை ஆசிரியர்கள் பலரும் பிராமணர்களே. எழுத்தாளர்கள், கவிஞர்கள், புலவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான பிராமணர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் சேவையாற்றியுள்ளார்கள். தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர், பாட்டுக்கொருபுலவன் பாரதியும் பிராமணரே. தமிழ் சிலேடை சக்கரவர்த்தி கி.வா.ஜகன்நாதன், உயிரோட்டமுள்ள சரித்திரக் கதைகளை எழுதி சரித்திர நாயகனாக திகழும் கல்கியும் பிராமணரே, சரித்திரக் கதை சாதனையாளர் சாண்டில்யனும் பிராமணரே. சிறந்த வார இதழான ஆனந்த விகடன் பத்திரிக்கையை நிறுவிய திரு.எஸ்.எஸ். வாசனும் பிராமணரே. நகைச்சுவையுடன் நயம்பட எழுதுவதில் வல்லவரான சாவி, நாடோடி, தேவன் ஆகியோரும் பிராமணர்களே. மிகச்சிறந்த சித்தாந்தங்களை அற்புத தமிழ் வார்த்தைகளில் பாடலாக வடித்து வரும் ஒப்பற்ற பாடலாசிரியர் திரு.வாலி அவர்களும் பிராமணரே. புதுமை எழுத்தாளர் சுஜாதா அவர்களும் பிராமணரே. பாரதி கண்ட புதுமைப்பெண் சிவசங்கரியும் பிராமணரே. ஆனந்த விகடனில் பொட்டில் அடித்தால் போல் பதில் சொல்லும் கார்ட்டூன் மன்னர் மதன் அவர்களும் பிராமணரே. தமிழ் இலக்கிய பீடம் பத்திரிக்கையை நடத்தும் இலக்கியவாதி விக்கிரமனும் பிராமணரே. தமிழ் மொழியை ஏற்றுப் பேசும் அனைவருமே தமிழர்களே. அவர்களது பேச்சு மொழியும் தாய்மொழியும் தமிழ்தான்.

இவர்களைத் தமிழர் இல்லை என்று சொல்வது தவறு. தமிழையே சுவாசிப்பவர்கள் இவர்கள்.

யார் தமிழரல்லாதவர்? தன் தாய்மொழி தமிழாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், வளர்ந்திருந்தாலும், தமிழ் பேசுவதை அநாகரிகமாகக் கருதி, தான் ஏதோ தேம்ஸ் நதிக்கரையோரம் பிறந்தவர் போல் நடித்து இருபத்தி நான்கு மணிநேரமும் ஆங்கிலத்தில் முழங்குகிறார்களே அவர்கள்தான் தமிழர்கள் அல்லர். தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாக பெற்று "Sorry I don't know Tamil" என்பவர்களே தமிழரல்லாதவர்கள்.

"தமிழா! தமிழா!!"

 

 

 
Powered by FFMedias