உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

தமிழர் நிலை

ஒருமுறை மும்பை மாநகராட்சி அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தோம். மாநகராட்சி நகர குப்பையை எடுத்துச் சென்று அவர்கள் கொட்டும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு நூற்றுக்கணக்கான ஆண், பெண், குழந்தைகள் குப்பையில் இருந்து பிளாஸ்டிக், டயர், உலோகங்கள் ஆகியவைகளை சேகரித்து, குவித்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இப்படிக் குப்பைகளைச் சேகரித்து அவைகளை விற்று வயிற்றைக் கழுவிக் கொண்டு இருந்தார்கள். மாநகராட்சி அதிகாரிகள் எங்களை அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள்.

நான் அந்த அதிகாரியிடம் ஆங்கிலத்தில் கேட்டதை அவர் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறி அவர்கள் இந்தியில் சொன்ன பதிலை என்னிடம் ஆங்கிலத்தில் கூறிக் கொண்டு இருந்தார். சுருக்கமாகச் சொல்வதென்றால், எனக்கும், குப்பைக் களப்பணி செய்து கொண்டிருந்த அவர்களுக்கும், ஒருமொழி பெயர்ப்பாளராக அந்த மும்பை மராத்திய அதிகாரி திகழ்ந்தார். அப்பொழுது சினிமாவில் வருவது போன்ற ஒரு உச்சக்கட்டக் காட்சி. குப்பையைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கு இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டான். உடனே அந்தப் பையனின் தாயார் அவனிடம், "டேய் பார்த்து வேலை செய்யுடா" என்று தமிழில் கூறினார். எனக்கு உடனே புரிந்தது. "அந்தக் குப்பை அவர்களைப் பொருத்தவரை கோமேதகம்தான். அந்தக் குப்பையிலிருந்து தேடிக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள். அந்த மராட்டிய அதிகாரியைப் பார்த்து, "நீங்கள் சற்று ஒதுங்கி இருங்கள்" என்று கூறி அவர்களிடம் நேரடியாகத் தமிழில் பேச ஆரம்பித்தேன். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, பிழைப்பைத் தேடி மும்பை வந்தவர்கள். எங்கும் வேலை கிடைக்காத நிலையில் அவர்களை வரவேற்று வாழ்வு தந்தது அந்த மாநகராட்சி குப்பை கொட்டும் அந்த இடம்தான். தமிழன் ஒரு அற்புத உழைப்பாளி என்ற என் எண்ணத்திற்கு ஏற்றம் கொடுத்தவர்கள் அங்கு நான் சந்தித்த இன்றும் என் கண்ணை விட்டு அகலாத மும்பாய் குப்பை மேட்டுத் தமிழர்கள்.

 

 

 
 
Powered by FFMedias