உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

தமிழ் மொழியை வளர்க்கும் பிற மொழியினர்

தமிழ்நாடு அறக்கட்டளையில் நான் பார்த்த அதிசயம்

தமிழ்நாடு அறக்கட்டனை என்பது, அமெரிக்காவில் வாழும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கொடை அமைப்பாகும். இவ்வமைப்பு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு குறிப்பாக ஏழைத் தமிழர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து வருகின்றது. இதில் கணிசமாக நிதியைத் தந்து இருப்பவர் திரு.ராம் துக்காராம் அவர்கள். இப்போது நான் அதில் ஒரு இயக்குனராக இருக்கிறேன். முதன்முறையாக தமிழ்நாடு அறக்கட்டளைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது என்னை அதிசயிக்க வைத்தது, தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவராகத் திகழ்ந்த திரு.ராம் துக்காராம் அவர்களின் செயலாளராகப் பணிபுரிந்துக் கொண்டிருந்த திருமதி.விஜயாநாதன் அவர்களும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இதில் பெரிய கொடையாளியான தமிழ்நாட்டுக்கு உதவி செய்து கொண்டு வரும் திரு.ராம் துக்காராம் அவர்களாவது தஞ்சையில் பிறந்து, சென்னையில் படித்து அமெரிக்கா சென்றவர். ஆனால் திருமதி.விஜயாநாதன் அவர்களோ ஆந்திராவில் பிறந்து, ஆந்திராவில் வளர்ந்து சென்னையில் திருமணம் செய்து கொண்டவர் என்றாலும், இவர்கள் இருவரும் தமிழுக்காக, தமிழ்நாட்டிற்காக தமிழ்நாட்டு ஏழைகளுக்காக ஆற்றும் பணி அளவிற்கரியது. இப்படியும் மனிதர்களா! என்று ஆச்சரியப்பட்டேன். அதே நேரத்தில் இவர்கள் தாய்மொழி தெலுங்கு என்று பாராமல், இவர்களையே தலைவராகவும், செயலாளராகவும் தேர்ந்தெடுத்த அமெரிக்கவாழ் தமிழர்களின் உள்ளமும், இவ்வுலகத்தைவிட பரந்தது, விரிந்தது, சிறந்தது என்பது எனக்குப் புரிந்தது.

இதைப் படிக்கும் நண்பர்களே! இன்றிலிருந்து மொழி வேற்றுமை பாராட்டாதீர்கள். அப்படி வேற்றுமை பாராட்டும் எண்ணம் வரும் போதெல்லாம் திரு.ராம் துக்காராம் அவர்களையும், திருமதி.விஜயாநாதன் அவர்களையும் நினைவில் கொண்டு வாருங்கள்.

தமிழ் நாட்டில் ஒரு ஊரில் தமிழ் சங்கக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் பேசிய ஒருவர் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். அத்தோடு நிற்காமல் இவர் செட்டியாருங்க, அவர் முதலியாருங்க, அங்கு இருப்பவர் நாயுடு என்று கூறிக் கொண்டே போனார். நான் கையெடுத்துக் கும்பிட்டேன். தயவு செய்து இப்படிக் கூறுவதை இனி தவிருங்கள் என்றேன். இப்படிப் பார்த்தால் முடிவில் அந்த தமிழ் சங்கத்திலேயே ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கோஷ்டி ஒன்று உருவாகி, சங்கம் பிளவுபட்டு விடும் என்றேன்.

என்னை அதிசயக்க வைத்த விஷயம் அயல்நாட்டிற்குச் சென்று குடியேறி, தமிழர்கள் அங்கு சென்றதும் சாதியை விடவில்லை. அனைத்து அமெரிக்கா இந்த ஜாதி சங்கம், அந்த ஜாதி சங்கம் என்று அமைத்து செயல்படுத்தி வருவது வருத்தத்தை வரவழைக்கிறது.

அந்தக் காலத்தில் பல பெரியவர்கள், ஜாதிப் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் ஜாதி வெறி அவர்கள் உள்ளத்தில் இல்லை. உதாரணமாக வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், டி.கே.சிதம்பரநாத முதலியார், டி.கே.சண்முகம் செட்டியார், அவினாசிலிங்கம் செட்டியார், ஏ.எல். முதலியார். ஆனால் இன்றோ ஜாதியின் பெயரை தங்களின் பெயருடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் போய்விட்டது. ஜாதி வெறியோ உள்ளத்தில் வந்துவிட்டது.

மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.இராஜகோபால் அவர்களுடைய தாய்மொழி தெலுங்கு.

மிகச்சிறந்த தமிழ் அறிஞர் : மார்வாடி இனத்தை சேர்ந்த கிஷன் சோர்டியா மிகச்சிறந்த தமிழர் அறிஞர்.

கணையாழி இலக்கியப் பத்திரிக்கை வருமானம் குறைவால் நின்று போய்விட்ட நிலையில் அந்நூலை விலைக்கு வாங்கி அதை நடத்தி தமிழ் இலக்கியத்தை வளர்த்து வருபவர், யார் என்றால், திரு.தாமன் பிரகாஷ் என்ற இராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஜெயின் மதத்தினர்.

இதோ கீழே ஒரு கட்டுரை. படியுங்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாவீர்கள். காரணம் இக்கட்டுரை "சமஸ்கிருதத் தமிழ்" மொழியில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமே திராவிட மொழியாக ஒரு காலத்தில் திகழ்ந்து வந்தது. தொன்மை மொழியான சமஸ்கிருதம் திராவிட மாநிலங்களில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்தது. சமஸ்கிருத மொழி தமிழ் மொழியுடன் ஒவ்வொரு திராவிட நாட்டுப் பகுதிகளிலும் வெவ்வேறு விகிதத்தில் கலந்தது. இடத்திற்கு இடம் சமஸ்கிருத மொழியின் ஊடுருவல் வேறுபட்டது. மேற்கு திராவிட நாட்டில் அங்கு தமிழ் பேசிய மக்களிடம் சமஸ்கிருதம் சென்று பிரபலமாகி தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மலையாள மொழி உருவானது. வடக்கு, வட மேற்கு, வடக்கிழக்கு திராவிட நாடுகளில் சமஸ்கிருதம் தமிழுடன் கலந்து தெலுங்கு மொழியாயிற்று. கன்னட மொழியாயிற்று. இம்மூன்று மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மிக அதிகம். இம்மொழிகளும் இன்னும் சிறந்த தூய தமிழ் வார்த்தைகளும் ஏராளமானது இருக்கின்றன, பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இம்மூன்று மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகளே அதிகம். தமிழ் மொழியிலும் சமஸ்கிருத வார்த்தைகள் கணிசமாக ஊடுருவியுள்ளன. ஆனால் தமிழ் மொழியில் ஊடுருவல் குறைவு. இதில் நடைமுறையில் உள்ள வார்த்தைகள் ஏற்று, பேசுவதில் மற்றும் எழுதுவதில் தவறேதுமில்லை.

"பக்தியின் பெருமை"

("சம்ஸ்கிருத தமிழில்" எழுதியர் நூலாசிரியர் அல்ல)

சமஸ்கிருதத் தமிழில்

(எழுதியவர் நூலாசி)

ராஜாக்களால் மதிக்கப்படும் அளவிற்கு பாண்டித்யம் படித்த பண்டிதர்களையும் பெற்றால் போதும். பெற்றால்தான் என்ன? கோடி, கோடியாக ஐஸ்வர்யம் இருந்தால் என்ன? லஷ்மியை பூஜித்தால் மட்டும் போதுமா? ஆச்சர்யம், அதிஷ்டம் இருந்தால் போதுமா? சௌந்தர்ய போகத்தை அனுபவித்தால் என்ன? தனது ஆத்மாவை பிராத்திக்காதவனுக்கு என்ன இருக்கிறது? என்று பகவான் சங்கரர் போதிக்கிறார். ஆகவே இந்த லோகத்தில் மனுஷனானவன் எத்தகைய மேதாவியானாலும், ஐஸ்வர்யம் பெற்றாலும், சுகபோகங்களை அனுபவத்தாலும் ஆத்மாவை அடையாதவன் துக்கத்திலிருந்து முக்தியடையமாட்டான். தத்துவத்தை உணர்ந்தால்தான் அது கிடைக்கப் பெறலாம். அத்தகைய தத்துவ ஞானமானது பரிசுத்தமான மனதில்தான் உதிக்கிறது. மனசைக் களங்கப்படுத்தும் ஆசையை சாந்தமாக நிர்மூலமாக்க வேண்டும். அப்போதுதான் மனசு ஞானமடையும் யோக்யதையை அடைகிறது. ஞானமார்க்கத்தில் செல்பவர்க்கே ப்ரம்மமாகிய ஆத்மா வெளிப்படும். ஞானத்தின் அர்த்தம் "அந்தரங்கமான ஸாஷாத் அனுபவம்" என்பதாகும். ஞான மார்க்கத்தில் செல்ல யோக்யதை அடைய வேண்டுமானால், பலனை எதிர்பாராது கர்மாக்களை அனுஷ்டிக்க வேண்டும். (கர்மயோகம்) இஷ்ட தேவதையிடம் ஸ்திரமான பக்தி செலுத்த வேண்டும். (பக்தி யோகம்). த்யான நிஷ்டையில் இருக்க வேண்டும். (த்யான யோகம்). இத்தகைய யோக்யதைகளைப் பெற்று ஆத்மாவிசாரம் செய்து விசாரணை செய்து கொண்டே போனால், ராத்திரி நீங்கி பகல் அதாவது சூர்யன் உதயமாவது போல இரண்டற்ற பொருளான ஆத்மாவைப் பற்றிய ஞானோதயேம் உண்டாகும். இவ்வாறு நம் ஞானத்தால் நீங்கி ஆத்மா தானாகவே வெளிப்படுத்துகிறது. இதுவே "மோக்ஷம்" எனப்படும். ஆகவே தியானத்திற்குப் பக்கபலமாக பக்தி அமைகிறது. சாஸ்திரங்கள் பக்தியின் மஹத்துவத்தை வெகுவாக வர்ணிக்கின்றன. பக்தியில் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று "ஞானம்" மற்றொன்று "ப்ரேமை". இவையிரண்டும் பக்குவத்துடன் இணைவதே "பக்தி" எனப்படும். ஒருவரது குணாதிசயங்களின் மஹிமையை அறிந்து கொள்ளாமல் அவனிடம் பிரியம் வைத்தால் அது பிரேமையாகும்.

பாலகர்களிடமும், குடும்பத்தவரிடமும் பிரியத்தைச் செலுத்தும் போது இந்தப் பாசமே பூரணமாய் விளங்கும். ஒரு சிஷ்யன் ஆசார்யனிடம் பக்தி செலுத்துவது, ஒரு பாலகனுக்கு தன் மாதாபிதாக்களிடம் ஏற்படும் பக்தி, ஒரு சேவகனுக்கு யஜமானரிடம் உள்ள பக்தி இத்யாதியெல்லாம் அவர் அவரது பவ்யத்தையோ, மரியாதையையோ உதாஹரிப்பதாக உள்ளது. ஆனால் பகவானின் மஹிமையை அறிய அறிய மனதில் புனிதமான பக்தி பெருகும். பகவானின் பிரபாவத்தை அறியாமல் அவனிடம் செலுத்தும் பிரியம் பிரயோசனமற்றது. இதன் காரணமாகவே வேதங்கள் பகவானது குணாதியங்களை வெகுவாக பிரகாசிக்கச் செய்கின்றன.

நம்மிடம் உள்ள தேஹம், இந்திரியங்கள், இத்யாதி சாதனங்களையும், தனத்தையும் பரமாத்மாவிற்குப் பிரியமான கார்யங்களுக்காக ப்ரயோசனப்படுத்துவதே பகவானுக்கு நம்மை சமர்ப்பணம் செய்வதாகும். நம்மிடம் கிஞ்சித்தே பணம் இருப்பினும் அதை சுயலாபத்துக்கும், சுகபோகங்களுக்கும் உபயோகித்துக் கொள்ளாமல், பகவானின் சேவைக்காக விநியோகிக்க வேண்டும். நாம் அளிக்கும் தனத்தைவிட, செய்யும் தானத்தைவிட மனதில் உள்ள பக்தி பாவத்தையே பகவான் பார்க்கிறான். எவ்வளவு அல்பமான பொருளானாலும், பக்தியின் பிரபாவத்தால் அது மிகப்பெரியதாகிறது. அதவாது, பகவான் தன் பக்தனிடமிருந்து தியாகத்தையும், ஸமர்ப்பன உணர்வையும், இச்சிக்கிறான். இதனால் சமுதாயத்தில் உதாராணத்தோடு கூட தனி மனிதனின் கீர்த்தியும் சாத்தியமாகிறது. ஸ்வர்ண அலங்காரங்கள் செய்து ஆடம்பர பூஜை செய்த இராஜாக்களுக்கு லபிக்காத ஆன்மீக சித்தியை, துளசி இலைகளால் பரமாத்மாவிற்கு அர்ச்சித்த விஷ்ணுதாசரால் அடைய முடிந்தது. முதலையின் தாக்குதலை சக்தியுடன் எதிர்த்து தன் பிரயத்தினங்களெல்லாம் ப்ரயோஜனம் அற்றுப் போனபோது, பத்மபுஷ்பத்தைத் தன் துதிக்கையால் ஏந்தி பிரார்த்தித்த போது, கஜேந்திரன் ரஷிக்க ஓடி வந்தான் பக்தவத்ஸலரான ஸ்ரீஹரி. வருஷக்கணக்காக ஸ்ரீ ராமனின் தரிசனத்துக்காக காத்திருந்த ஸேவகி சபரி ஆரண்யத்தில் கிடைத்த சில பழங்களை ராமனுக்கு அளித்து அவனது க்ருயைப் பெற்றாள். வெகுநாள் உபவாஸத்துக்குப் பிறகுதான் அன்று புசிக்க வைத்திருந்த ஆகாரத்தைப் பட்டினியால் வாடியிருந்த வேடர்களுக்கு அளித்துவிட்டு, கொஞ்சம் ஜலத்தை மட்டும் அருந்தப் போனான் ராஜா ரந்திதேவன். அந்தச் சமயம் தாகத்தால் வாடி வாயைத் திறந்தபடி அவன் முன்னால் நின்ற நாயைக் (சுவானம்) கண்டதும், ஸர்வாந்தர்யாமியான ஸ்ரீஹரிக்கு ப்ரீதி உண்டாகட்டும் என்று நினைத்து அந்த ஜலத்தையும் அந்த நாய்க்கு அளித்துவிட்டான். தியாகியும், தபஸ்வியுமான ராஜா ரந்திதேவன். இவ்வாறு ப்தரம், புஷ்பம், பலம், தோயம் இவைகளின் சமர்ப்பணத்திற்கு விஷ்ணுதாஸர், கஜேந்திரன், சபரி, ரந்திதேவன் ஆகியோர் உதாரணமானவர்கள்.

நமது கர்மாக்களை ஹரி பூஜையாக நினைத்து நிஷ்காமமாகச் செய்ய வேண்டும். விஷய சுகங்களில் விரக்தி கொள்வதனால்தான் இதை நிஷ்காமமாகச் செய்ய முடியும். ஹரி பக்தி, விஷயவிரக்தி இவை இரண்டும் நம்முடைய ஒவ்வொரு காரியத்திலும் அடங்கியிருப்பதால் நாம் பயமில்லாமல் உலகில் பவனி செய்யலாம். யாத்திரை செய்யலாம். இதுதான் ஜீவிதத்தின் பொக்கிஷம். ஸ்ரீமத் பகவத் கீதை இதையே மனுஷ்ய சமுதாயத்திற்கு மங்களகரமான விஷயமாக வழங்குகிறது.

பாபம் கூடாது. முகப்பாவமே ஒரு மனுஷன் பாபத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். மறு ஜென்மத்திலும் தொடரும். எதிலும் பவ்யம் வேண்டும். தயை வேண்டும். கருணை வேண்டும். ஸ்வாமிக்குச் சேவை செய்துவிட வேண்டும்.

 

 

 
Powered by FFMedias